பயங்கரம் ஒரு அட்டவணையில் இருந்தது அழகு வேறொரு அட்டவணையின் கீழ் இருந்தது ஆயினும் இரண்டும் கண்ணொடு கண் நோக்கி அமர்ந்திருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அழகு பயங்கரமாகி வந்தது. பயங்கரம் அழகு கொண்டு எழுந்தது. அழகிற்காக மனிதத் தலையொன்று மண்ணில் துண்டாகி வீழ்ந்தபோது அழகு பயங்கரமாகிவிட்டது. பயங்கரம் என்று அறிந்திருந்தும் அதைத் திரும்பத் திரும்ப காண உந்தும் துடிதுடிப்பில் பயங்கரம் அழகாகிவிட்டது. பயங்கர அழகே! நான் சின்னஞ்சிறுவன் எனக்கு வழிவிடு! |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments