தகவல்களின் இலக்கியக் களஞ்சியம்

இந்தநூலில் முத்துலிங்கத்தின் 40 கட்டுரைகள் தேர்ந்தெடுத்து கிளாசிக் வரிசையாகத் தொகுகப்பட்டுள்ளன. இத்தொகுப்பிற்கான அடிப்படைகள் இரண்டு. முதலாவது அவரது எல்லா ஆர்வங்களும் வெளிப்பட வேண்டும் என்பது. இரண்டாவது என் சொந்த ரசனை. இந்தத் தேர்வில் ஒரு திருத்தமும் அவர் சொல்லவில்லை. "இது உங்கள் புத்தகம்தான்" என்று சொல்லிவிட்டார். என்னால் எவ்வளவு பொறுப்பாக நடக்க இயலுமோ அவ்வளவு பொறுப்பாக இதில் வெளிப்பட்டுள்ளேன் என்றே நம்புகிறேன். அவரது தீவிர வாசகர் ஒருவர் 'அந்தக் கட்டுரை இல்லாமல் இதென்ன தொகுப்பு?' என்று சீற்றம் கொள்ளக்கூடும். 'ஆம்..நண்பரே அந்தக் கட்டுரைக்கு இந்த நூலில் இடம் இல்லை...ஆனால் அதுவும் நல்ல கட்டுரைதான்' . ஏறக்குறைய 1500 பக்கங்களை 250 பக்கமாகச் சுருக்குவது அவ்வளவு எளிய பணியாக இருக்கவில்லை. எனவே அவரவர் ரசனையில் நிச்சயம் விடுபடல்கள் இருக்கும்.
தமிழில் சலீசான பலவற்றுள் ஒன்று 'களஞ்சியம்'. சமீபத்தில் காண நேர்ந்த ஒரு புத்தகத்தின் தலைப்பு' நரேந்திர மோதியின் கவிதைக் களஞ்சியம்'. மனதை இரும்பாக்கிக் கொண்டுதான் மேற்காணும் தலைப்பைச் சூட்டினேன். ஏனெனில் இந்நூல் உண்மையில் ஒரு களஞ்சியம்.
தகவல்கள் தகவல்களாக இருக்கையில் அவை சாதாரண உண்மைகள். பொது அறிவுப்பாடத்தில் இரண்டு மதிப்பெண்களை ஈட்டித்தர போதுமானவை. தகவல்கள் இன்னொன்றாகி இலக்கியமாகின்றன. அந்த இன்னொன்றாக்கலில் சமத்தர் அ.முத்துலிங்கம்.
தகவல் இலக்கியமாகையில் துலக்கமாவதற்குப் பதிலாக புகைமூட்டம் கொள்கிறது. ஆழமாகிறது.நுண்மடிப்புகள் பூண்டு வேறொன்றாகிறது. அவை இப்போது உலகு உரக்கச் சொல்கிற ஒரு வரியிலான ஒற்றை உண்மை அல்ல.
இந்த நூலில் விதவிதமான வாழ்வுகள் உண்டு. விஞ்ஞானம் உண்டு. வரலாறு உண்டு. தொன்மம் உண்டு. விளையாட்டு உண்டு. நகை உண்டு. தமிழும் கவிதையும் உளது. இவையாவும் இலக்கியமாகும் ரசவாதம் இதன் ஒவ்வொரு பக்கத்திலும் உண்டு.ஒரு பக்கத்திலேனும் கொட்டாவி இல்லை.
இவரது எழுத்து எளிமையும் நுட்பமும் கச்சிதமும் கொண்டது. இந்த அழகுகள் இயல்பில் வந்து அவர் எழுத்தில் அமர்கிறதா? அல்லது மெனக்கெடுகிறாரா? மெனக்கெடுகிறார். திருத்தி எழுதுகையில்தான் இலக்கியம் பிறக்கிறது என்று அவர் நம்புகிறார்.ஆகவே அவ்வளவு பொறுமையோடு அதைச் செதுக்கி செதுக்கி வார்க்கிறார். சாதாரண வரிகளைக்கூட இந்த உழைப்பால் மின்ன வைத்துவிடுகிறார். ஒரு நேர்காணலில் சொல்கிறார்... " எழுத்தாளருக்கு வார்த்தை அடுக்கு மிகவும் முக்கியம். 'அவன் மரத்தின் உச்சிக்கு ஏறினான்' என்று எழுதுகிறோம். அதையே ஒரு எழுத்தாளர் ' he climbed and climbed till there was no more tree' என்று எழுதுகிறார். அதே வார்த்தைகளை வைத்து என்ன ஜாலம் செய்திருக்கிறார்".
"80 வயதுக் கண்களில் இருந்து நீர் கொட்டியது" என்கிறது ஒரு கட்டுரை வரி. 80 வயதுக்காரர் கண்களில் இருந்து நீர் கொட்டியது என்று எழுதலாம். இரண்டிற்கும் அர்த்தத்தில் வேறுபாடில்லை. ஆனால் உணர்வில் இருக்கிறது. முத்துலிங்கத்தின் வரியில் கண் தனியாகத் தெரிகிறது. கண்ணீர் தெளிவாகக் கொட்டுகிறது.
இந்தநூலில் ஒரு பெரும் பயணம் உள்ளது. ஈழத்தில் பிறந்து பிறகு அங்கிருந்து புலம் பெயர்ந்து பத்திற்கும் அதிகமான நாடுகளில் இவர் பணியாற்றுகிறார். அந்த தேசங்களின் புதுப்புது கலாச்சாரங்களோடு உறவு கொள்கிறார். அதை எழுத்தாக்கி உள்ளார். 12 வருடங்கள் ஒரே மனைவியோடு, 44 வருடங்கள் ஒரே கிராமத்தில் , ஒரே வழித்தடத்தை தேய்த்துத் தேய்த்து சிதைத்திருக்கும் எனக்கு இவ்வனுபவங்கள் காணக் கிடைக்காதவை. சுவாரஸ்யமானவை. அதிர்ச்சி அளிப்பவை. முக்கியமாக வாழ்வை அணுகி அறிய உதவுபவை.
முத்துலிங்கம் இந்தப் பயணத்தின் வழியே உலகத்து வாழ்வின் வெவ்வேறு முகங்களைக் காட்சிக்கு வைக்கிறார்.இவ்வாறு வெவ்வேறைக் காண்கையில் நாம் வெகுகாலம் மூச்சுமுட்ட அழுத்திப் பிடித்திருக்கும் ஒற்றை வாழ்வின் மீதான பிடி கொஞ்சம் தளர்கிறது. அப்போது நாமும் கொஞ்சம் தளர்ந்து ஆசுவாசம் கொள்கிறோம். அழுத்திப் பிடிக்கப்படும் ஒன்று உண்மையில் திமிறிக் கொண்டிருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறலாம்.
எல்லாக் கட்டுரைகளும் கிளாசிக் என்கிற வகைப்பாட்டின் கீழ் வைக்க தகுதியுடையனவே. " எழுத்தாளரும் புகைப்படமும்" என்கிற கட்டுரை நகையில் துவங்கி நகையில் முடிகிறது. அப்படி ஒரு கட்டுரை இருக்க வேண்டும் என்று விரும்பினேன். நகையும் கிளாசிக் ஆகலாம். எண்வகை மெய்ப்பாடுகளுள் நகையை முதலாவதாக வைத்துப் போற்றுகிறது தொல்காப்பியம்.
என் கவியுலகு புத்துணர்ச்சி கொண்டது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது உண்மையெனில் இந்த நூலில் உள்ள " ஒரு போலந்து பெண் கவி" என்கிற கட்டுரைக்கும் அதில் பங்குண்டு. பலவருடங்கள் முன்னால் இதழில் வாசித்த போது அடைந்த பரவசத்தை இப்போதும் தருகிறது. இந்தக் கட்டுரைக்குப் பிறகு ' விஸ்லவா ஸிம்போர்ஸ்கா' பிளேக் மாரியம்மன் கோவில் வீதிக்கு குடி வந்துவிட்டார். தினமும் மாலை நடை செல்கையில் அவரைக் கண்டு கையசைக்கிறேன்
இவர் கட்டுரைகள் புனைவுத்தன்மை கொண்டவை. சில கட்டுரைகள் ஆகச்சிறந்த கதை ஆக வாய்ப்புள்ளவை. என்ன காரணத்தாலோ அதைக் கட்டுரை ஆக்கியுள்ளார் . கையில் அப்பாய்மெண்ட் ஆர்டர் வாங்கிய நிமிடத்திலிருந்து புத்தகம் என்கிற ஜீவராசியை முற்றாக மறந்து விட்ட மனிதர்களைக் கூட இழுத்துப் பிடித்து நிறுத்தி வைத்து" ரோறா போறா சமையல்காரன்" கட்டுரையைச் சொல்லிச் சொல்லி அரற்றிக் கொண்டிருக்கிறேன்.
சாதாரணவரிகள் கூட சமயங்களில் பெரிய உண்மைகளுக்கு இட்டுச் சென்று விடுகின்றன. கணினித் தமிழின் சிக்கல்கள் குறித்த கட்டுரை ஒன்றில் இடம் பெறும் ஒரு பத்தி...
"இன்னொருமுறை கணினி தரம் மாற்றம் அடைந்த போது 'ஆ' வரவில்லை. கதையில் வரும் ஆலமரத்தை அரசமரமாக்கினேன். ஆவென்று அழுதான் என்று எழுதாமல் ஓவென்று அழுதான் என்று எழுதினேன். ஆனால் " ஆனால்" என்கிற வார்த்தையைத் தவிர்த்து எவ்வளவு தூரத்துக்கு ஓட முடியும் ". நின்று யோசித்தால் இது வெறும் கணினித்தமிழ் சிக்கலல்ல. இந்த வாழ்வின் சிக்கல். நம்மிடமிருந்து 'ஆனாலை ' பிடிங்கி விட்டால் ஒரு நாளைக்கூட நம்மால் நகர்த்த முடியாது.
'எங்களுக்குள் போட்டி உண்டு. ஆனால் பொறாமை இல்லை'
'பெட்ரோல் விலை உயர்வை இந்த அரசு அறவே விரும்பவில்லை. ஆனால் வேறு வழியில்லை'
'அவர் ஒரு ஈ எறும்புக்குக் கூட துரோகம் செய்ய மாட்டார். ஆனால் மனைவியை பெல்ட்டால் அடிப்பார்'
'நான் பதினைந்து வயதிலேயே சாதியை உடைத்து குப்பைத் தொட்டிக்குள் எறிந்துவிட்டேன். ஆனால் சொந்த சாதியில் திருமணம் செய்து கொண்டேன்'
'அவரிடம் சல்லிக்காசு கூட இல்லை. ஆனால் படுத்த கணத்திற்கு அடுத்தகணம் தூங்கிவிடுவார்'
'நைலான் கயிறு ஸ்டாக் இல்ல சார்.. ஆனால் எலிப்பாஷாணம் இருக்கு...'
'அவள் மை கருப்பு.ஆனால் அவ்வளவு அழகி'
'ஒரு துப்புரவுத் தொழிலாளியை வல்லாங்கு செய்த குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கிறான். ஆனால் மிகச்சிறந்த கவிஞன்'
'நான் ஒரு ஆடிட்டர். ஆனால் நேர்மையானவன்'
உண்மையில் இந்த 'ஆனால்' வாழ்வின் போதாமைகளை நிரப்ப வந்ததா? அல்லது பறைசாற்ற வந்ததா?. 'ஆனால்' இன்றி இந்த வாழ்வைச் சமாளிக்கவே முடியாது என்று தோன்றுகிறது. கவிதைச் செயல்பாட்டிலும் இதன் இடம் குறித்து நான் யோசித்ததுண்டு. இதனால் துலங்கி வராத ஒரு வரியை பிரகாசிக்கச் செய்ய இயலும். அதிகப் பிரசங்கித்தனமாக டாலடிக்கும் ஒரு வரியை மட்டுப்படுத்தவும் இதனால் இயலும்.
முத்துலிங்கம் பரந்த வாசிப்புக் கொண்டவர் என்பதால் அவர் வழியே உலகத்துச் சிறந்த இலக்கியங்களின், சிறந்த சில வரிகளை நாம் இதில் வாசித்துவிடுகிறோம்.
இவருக்கு அருமையான சொற்றொடர்களை வாசிக்கையில் தன்னையும் அறியாமல் தலையில் அடித்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறதாம். எனக்கும் அப்பழக்கம் உண்டு. அதுவும் இவரது எழுத்தை வாசிக்கையில் அடித்துக் கொள்ளாமல் முடித்ததில்லை.
முத்துலிங்கத்தின் உவமைகள் புதியவை. துல்லியமானவை. மனதைவிட்டு அகலாதவை.
"தொடர்ந்து 30 மணி நேரம் பயணம் செய்தவர் போலத் தெரியவே இல்லை. மின்னஞ்சலில் வந்த படம்போல பளிச்சென்று காணப்பட்டார்'
"ஐயாவின் வழுக்கை விழுந்த முன்னந்தலை கரப்பான்பூச்சி முதுகுபோல மினுங்கியது"
"அவருக்குப் பின்னால் ஒரு மனுஷி நின்றார். கொடியிலேயே மறந்து போய்விட்ட பாகற்காய் காய்ந்து சுருங்கியிருப்பது போல அவர் இருந்தார்"
இவருக்கு எழுத்தாளர்களைத் தேடித் தேடிச் சந்திப்பதில் தீராத ஆர்வம் இருக்கிறது. அவர்களது வாழ்க்கை முறைகள், எழுத்து முறைகள், எழுத்து அறைகள், எழுத்து மேசைகள் என எல்லாவற்றையும் கண்டுகண்டு மகிழ்கிறார். அதை அவ்வளவு ஆசையோடு பகிர்ந்து கொள்கிறார். நாஞ்சில்நாடன் என் வீட்டிற்கு 4 கி. மீ தூரத்தில் பல வருடங்கள் வாழ்ந்தார் . நானும் அவரைச் சந்திக்க எத்தனையோ முறைகள் திட்டமிட்டேன். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு வேற்றுகிரகத்து சதியால் அந்தத் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுவிட்டன.
இந்த நூலில் ஒரு உயிரியல் தகவல் வருகிறது. ' மீன்கள் ஆற்றில் துள்ளித்துள்ளிக் குதிப்பது அதன் உடலில் ஏறியிருக்கும் நீர்ப்பேன்களை உதறத் தானாம்'. இந்தத் தகவலை மட்டும் வாசிக்க வாசிக்கவே மறந்துவிடத் துடித்தேன்.
களஞ்சியத்தைக் கைப்பற்றுங்கள்!
இசை
இருகூர்
22/10/21
Comments