அந்தியில் மிதக்கும் வெண் கொக்கு மங்கலாகி விடுகிறது. அந்தி எல்லாவற்றையும் மங்கலாக்க விரும்புகிறது. நமது மூர்க்கத்திற்கெதிராய் ஒவ்வொரு நாளும் தெய்வீகத்தை ஏந்தி வந்து போராடுகிறது அது. மங்கும் வேளையில் வானில் விசாலத்தில் கடலின் ஆழத்தில் வேறொன்று உதிக்கிறது நிலவுக்கு முன். மங்க மாட்டாது எரிந்து கொண்டிருக்கும் ஒருவன் மோட்டார் சைக்கிளை மேலும் முடுக்குகிறான். அந்தியின் வசமிருப்பது ஒரே ஒரு சொல்தான். ஒன்றே ஒன்று என்பதால் அது ஒரு மந்திரம். நாள் முழுக்க ஒன்றுமே செய்யாத ஒருவனிடமும் அது அவ்வளவு பரிவுடன் சொல்கிறது... "போதும்...! " |
அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய துப்புரவு பணியாளிடம் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே ஆனாலும் இருபத்தைந்துதான்.."

Comments