Skip to main content

Posts

Showing posts from 2024

உணவு இடைவேளையில் ஒரு தரிசனம்

   "நீ போய்ச் சாப்பிடு, எனக்கு மனசு சரியில்லை..."  என்றாள் டிபன் பாக்ஸை கழற்றி வைத்து நிமிர்ந்தால்  எதிர் இருக்கையில்  அமர்ந்திருக்கிறாள் இவ்வளவு  அட்டகாசமான  மனதை வைத்துக் கொண்டு அதை ஏனடி  சரியில்லாமல் வைத்திருந்தாய்?

கொஞ்சம் குண்டுப் பெண்

    கொ ஞ்சம் குண்டுப்பெண் ஆனாலும் எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தாள் ஒரு முறை  மலரைத் தொட முடிந்தது அப்போதும் பறித்து வரக் கூடவில்லை. அவள் விடாது எம்பிக் கொண்டிருந்ததில் அந்த நிகழ்ச்சிக்கு ஆங்காங்கே பார்வையாளர்கள் தோன்றி விட்டார்கள். அவளா? மலரா? என்பதில் அவர்கள் ஆவல் கூர்ந்து விட்டனர் ஒரு தருணம் வந்தது முழங்காலில் கையூன்றி அவள் மூச்சிரைக்கும் தருணம் நிமிர்ந்து நின்றவள் மலரை அண்ணாந்து  ஒரு சிரிசிரித்தாள். பிறகு தன் வழியே நடக்கத் துவங்கிவிட்டாள். தோல்வி என்று சொல்லி விட முடியாத சிரிப்பே! இப்படித்தான்  இத்தனை பேரையும் ஏமாற்றுவாயா?

நம்மை ஒன்று பார்த்துக் கொண்டிருக்கிறது

  எ ங்கோ கண்காணாத இடத்தில் இருப்பாய் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இவ்வளவு பக்கத்தில் இருப்பதை இப்போதுதான் அறிகிறேன். கொஞ்சம் ஓங்கி அழைத்தால் திரும்பிப் பார்க்கும் தொலைவில் நின்று கொண்டிருக்கிறாய். கடவுள் உன்னை நல்லபடியாக வைத்திருக்கிறாரா? பழைய நண்பர்களை அழைக்க பழைய குதூகலத்தின் குரல் வேண்டும் நீ மெல்ல நகர்கிறாய். அதே நடைதான் அதில் மாற்றமில்லை வளைவில் திரும்பி மறைகையில் ஒருமுறை என்னைப் பார்த்தாய். என்னை எனில் என் திசையை.  

திக்... திக்... திக்

வ ரவர  எனக்குத்  திகில் படங்கள் மிகவும் பிடிக்கின்றன. ரிமோட்டை அழுத்தி அழுத்தி ஒன்று விடாமல்  தேடுகிறேன் பேய்கள் என்னைக் கேட்டுக் கொண்டுதான் திரையரங்கம் வருகின்றன. காய்ந்த சருகுகள் எவ்வளவு பிரமாதமாக நடிக்கின்றன யாருமற்ற திசை நோக்கி விட்டு விட்டுக் குலைக்கும் கருப்பு நாய் கும்மிருட்டை கிழித்துக் கொண்டு அடிக்கும் சின்ன வெளிச்சம் சூப்பர்….. திகிலின் கதவைத் திறந்து கொண்டு திகிலுக்குள் வருகிறேன் காய்ந்த சருகோ கருப்பு நாயோ  இல்லாத திகில் அஞ்சி அஞ்சி குலை நடுங்கும் திகில் நடுநடுங்கித்  தலைகுனியும் திகில்

இசை கவிதைகள் - அகழ்

  ஒ ன்று விட்ட சித்தப்பா நம்பியிருந்த நிலம் அவனை தலைகுப்புறக் கவிழ்த்துவிட்டது. சாக்கடைக்குள் உருளவில்லையாயினும் ஓரமாய்ச் சரிந்து விட்டான். வாந்திக்குள் விழுந்து கிடக்கும் நாற்றத்தைத் தேடி யார் வருவார்கள்? அவனே கண்விழித்து அவனே கை ஊன்றி அவனே எழுந்தால்தானே உண்டு? ஆனால் கதை அப்படியில்லை ஒரு ஆட்டோவுக்குள்ளிருந்து 5 பேர் ஓடி வந்தனர் வரவே மாட்டேன் என்கிற முகத்தை தூக்கிக் கொண்டு அவன் மனைவி வந்திருந்தாள் அதில் ஒருவர் ஒன்று விட்ட சித்தப்பாவாம் கண்ணீர் வழிய வழிய அவன் மோவாயில் கொஞ்சி கூப்பாட்டில் வினவுகிறார் “ஐயோ…ராசா! உனக்கு என்னதான் வேணும்னு சொல்லு…” இங்கு கொட்டிக் கிடக்கும் இவ்வளவில் ஒன்றைக் கூட கேட்க மாட்டேன் ஆனாலும் சித்தப்பா என்னை ஒரு முறை இப்படிக் கேளேன். OOO ம னிதன் தன்னை மறக்கத் தேவையான பொருட்கள் ஸ்வீடன் போய் வந்த நண்பன் ஸ்வீடன் போக முடியாத நண்பர்களிடம் கதை கதையாய்ச் சொல்லிக் கொண்டிருந்தான் ஸ்டோக்ஹோம் நகரில் ஒரு ஹோட்டல்… ஹோட்டல் என்றால் கல்லும் மண்ணும் சேர்த்துக் கட்டியதல்ல முழுக்க முழுக்க ஐஸ் கட்டிகளாலானது.. ஐஸ் ஹோட்டலில் ஒரு ஐஸ் பார்.. ஐஸ் மீது நடந்து சென்று ஐஸ் மீது அமரலாம். கதவு...

குரங்கிலிருந்து சிதாருக்கு

‘க பீர்’  என்கிற பெயர் அழைத்ததால் மீரட் நகரில் ஒரு இசைக்கூடத்திற்குள் நுழைந்தேன். இல்லாதவை இல்லை என்பது போல எங்கும் நிறைந்து ததும்பும் இசைக் கருவிகள் சின்னப் புல்லாங்குழலிருந்து பெரிய சிம்மாசனத்தில்  கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் பியானோ வரை அத்தனை கருவிகளுக்கும் மத்தியில்  வெறுமனே நின்று கொண்டிருந்தால் போதும் என்று தோன்றியது பிறகு தோன்றியது அல்ல உறுதியாக  இது வெறுமனே அல்ல எந்தக் கரமும் தீண்டாத போதும் ஒரு நரம்பு தன்னைத் தான் மீட்டி அளித்தது. சரியாக அப்போது பார்த்து கடைச் சிப்பந்தி ஒருவர்  கேட்டார் “ எங்கிருந்து வருகிறீர்கள்?” தலையைத்  தாழ்த்தியவாறே உள்ளுக்குள் முணுமுணுத்தேன்.. “குரங்கிலிருந்து…..”

இசை கவிதைகள் - அகழ்

கார் எனில் மயில் “மயில் தோக விரிச்சு நிக்குது” என்றாள். “மயிலா…. எங்கே… ?” என்றேன் திகைத்தபடி. “எங்கும் “ என்றாள் சிரித்தபடி. OOO இதில் மறைஞானம் ஒன்றுமில்லை தம்பி! நான் பிறக்கும் போதே பாதி மின்னலோடு பிறந்தேன் மின்னும் எதனுடனும் சட்டெனப் பின்னிக் கொள்கிறது என் மின்னல் நீ பிறக்கும் போதே பாதி மலரொடு பிறந்தாய் மலரைக் காண்கையில் அவிழ்வது அதுதான் அவள் கொஞ்சம் அந்திப் பொன் அந்தி அந்தியில் கரைந்து கொண்டிருக்கிறது அவனே எண்ணிக் கொண்டிருக்கும்படி அப்படியில்லை அவன் கண்ணீர்தான் கண்ணீரை அணைத்துக் கொள்கிறது இரண்டு பாதிகள் வட்டம் காணும் திருநாளில் வந்து நிற்கிறது பெளர்ணமி OOO களம் பல கண்டவரின் கடைசிச் சொற்கள் அவர் வீட்டிலிருந்து கிளம்புகையில் இனி யோசிக்க ஒன்றுமில்லை என்கிற முடிவுக்கு வந்திருந்தார் ஆனால் வழியெங்கும் யோசித்துக் கொண்டே வந்தார் அந்தப் பாலத்தின் மீது நின்று கொண்டு மேலும் ஒரு மணி நேரம் தீவிரமாக யோசித்தார். இனி யோசிக்க ஒன்றுமில்லை என்பது உறுதியானவுடன் “கடைசியில் எல்லாம் சாதாரணக் காதல்கதைகள் தானா?” என்று குனிந்தவாக்கில் ஏரித் தண்ணீரை நோக்கிக் கேட்டார். பிறகு அவ்வளவு உயரத்திலிருந்து அதற்குள் ப...

இசை கவிதைகள் - வாசகசாலை

வி ச்ராந்தியின் முன் நிற்றல் பெசண்ட் நகரில் கடலுக்குச் செல்லும் வழியில் உள்ளது விச்ராந்தி நண்பர்கள் நாங்கள் ஒரு நாள் தவறினாலும் மறுநாள் கூடிவிடுவோம் அங்கு விச்ராந்தியின் முன் நிற்பதற்கு தூர தூரங்களிலிருந்தும் ஆட்கள் வருகிறார்கள் அங்கு பென்னம் பெரிய ஒரு மரமுண்டு அதுதான் அனைவரையும் அழைத்து வருகிறது என்று சொல்லப்படுவதுண்டு ஆனால் அது உண்மையின் ஒரு துண்டுதான் மனிதருள் மரமுண்டு நிழலுண்டு விச்ராந்தியின் முற்றத்திற்கு மரங்கள் வருகின்றன , போகின்றன விச்ராந்தியின் முன் நிற்கும் ஒருவன் சிகரெட்டை கொளுத்தினால் அவன் வாயிலிருந்து ஏகாந்தம் மிதந்து செல்வதைக் காணலாம் மனிதர்கள் சமயங்களில் துணிந்து முடிவெடுத்து விடுகிறார்கள் சிரிப்பைச் சவுக்கால் அடித்து  விட முடியாது விச்ராந்திக்கு கண்ணோ, மூக்கோ கிடையாது அது ஒரு முழு காது விச்ராந்தியின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டால் படத்தில் நாம் ஒரு டீ கடையின் முன் நிற்பது போலவே தோன்றும்.     • ஆ த்மாநாமின் புதிய கவிதை ஒரு ரோஜா நாற்று வாங்கி வந்தேன் வீட்டில் அதற்கு எந்த இடம் பிடித்திருந்ததோ அந்த இடத்தில் நட்டு வைத்தேன். ஒளி தந்தேன் நீர் தந்தேன் இ...

நலமறிய ஆவல்

நீ ஒன்றை விரும்பினாய் மனிதன் மின்னலை விரும்புவதைப் போல நீ ஒன்றை ஆழமாக மோகித்து விட்டாய் அதுவோ  தூர தூரத்தில் உச்சியின் உச்சியில் வீற்றிருக்கிறது. அம்மா நிலவைக் காட்டி சோறூட்டுவதில் ஒரு போதனை உள்ளது துயரம் என்னவெனில் அதை நாம் கற்பதில்லை ஆசை அழிக்க முடியாத ஒரு மலர் அது பிறக்கிறது அழிவதென்னவோ நீ  அழிகையில்தான். நீ  ஒன்றில் பித்தாகிவிடுகிறாய் அதுவோ  ஆகப் பெரியது ஆகவே நீ அதற்குப் பதிலாக அது போல் ஒன்றை  காதலிக்கத் துவங்குகிறாய் உன் பெரியது சிறிதளவே உள்ள சிறியது நீ அதனுடன்  சிரிக்கப் பழகுகிறாய் இளையராஜவைத்தான் காதலிக்கிறோம்  என்பதறியாமல் ராஜாவைப் போல் பாடும் பையன்களை சிநேகித்த அக்காக்கள் கூடவே ரஹ்மானைக் காதலிப்பதற்குப்  பதிலாக சடை வளர்த்த பையன் பால் மையல் பூத்து மணமுடித்த தோழியர்கள் யாவரும்  நலம்தானே இப்போது?