Skip to main content

கவிதையின் பாட்டும், பாட்டின் கவிதையும்

“உங்களுக்கு சினிமாவிற்குப்  பாட்டெழுதும் விருப்பம் உள்ளதா?”  இந்தக் கேள்வியை சில சமயங்களில் எதிர் கொண்டிருக்கிறேன். “ உள்ளது” என்பதுதான் பதில். முழு நேரப்பாடலாசிரியராக ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசையில்லை. ஆனால் என் சொல்,  ஒரு பியானோவோடு  கூடி முயங்கும் இன்பத்தைக் காணும் ஆவல் உள்ளது. சொல்லொன்று  பாட்டாக   மாறித்துள்ளும் தருணத்தின் பரிதவிப்பை  அள்ளிப் பருகும் வேட்கை உள்ளது. இதில் குற்றம் ஏதுமிருப்பதாக நான் எண்ணவில்லை.  எவ்வளவு முரட்டுத்தனத்துடன் ‘இசை’ என்று எனக்கு நானே பெயர் சூட்டிக் கொண்டேனோ, அந்த முட்டாள் தனத்தின் சுகம் இன்னும் நெஞ்சு நிறைய இருந்து கொண்டுதான் இருக்கிறது. உங்களால் கவிதையையும் பாட்டையும் தெளிவாகக் காணமுடிமெனில் நீங்கள் இரண்டையும் குழப்பிக் கொள்ள அவசியமிருக்காது. மேல் கீழ் என்றல்ல, தனித்தனி என்றே நான் சினிமாப்பாடலையும் கவிதையையும் புரிந்து வைத்துள்ளேன்

திரையிசைப் பாடல்கள் எங்கும் நிறைந்துள்ளன. அது குறித்து இங்கு நாள் தவறாது பேசப்படுகிறது.” பழைய பாடல்களா?  புதிய பாடல்களா? “ என்று துவங்கிய ஒரு பட்டிமன்றம் அந்தப் புதிய பாடல்களெல்லாம் பழைய பாடல்கள் ஆன பிறகும் நிற்காது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. திரைப்பாடல்கள் இசையோடு இரண்டறக் கலந்தவை. அதற்கும் இசைக்கும் உள்ள உறவில் ஆராய ஒன்றுமில்லை. ஆகவே   தமிழ்க் கவிதைகளுக்குள் ஒளிந்திருக்கும் இசையை இனம் காண முயல்வதுதான் என் நோக்கம்.  இசையும் இலக்கியமும் தழுவிக் கொள்ளும் தருணங்களைக் காண முயல்வது

தமிழின் மகாகவியான பாரதி சங்கீதம் குறித்து சொல்கிறார்… “ இங்குள்ள ஜந்துக்களிலே மனிதருக்கும் பறவைகளுக்கும்தான்  பாடத் தெரியும். மற்ற மிருகங்களுக்குப் பாட்டு வராது. பறவைகள் வானத்திலே பறக்கும் வழக்கமிருப்பதால், அவற்றின் மனநிலை ஸங்கீதத்திற்கு இசைகின்றது போலும்! மனிதன் உடம்பினாலே பறக்காவிட்டாலும் உள்ளத்தை திசை வெளியிலே பறக்கும்படி செய்கிறான். அப்போது இயற்கையிலேயே பாட்டுத் தோன்றுகிறது “

பாட்டில் உள்ள பறத்தல் என்பது  வெறும் வேடிக்கையல்ல. அது நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் வாழ்விலிருந்து எழுந்து பறப்பது. நாம் பிணைக்கப்பட்டிருப்பதனின்றும் அறுத்துக் கொண்டு எழுவது.  ஒரு எளிய உயிரை அது அடைய அரிதான இன்பங்களுக்கு அருகில் தூக்கிச் செல்வது. நம்பவே முடியாத ஒன்றைக் கூட நாம் பாட்டில் நம்பி விடுகிறோம். பாரதி  “ பாட்டினைப் போல் ஆச்சர்யம் பாரின் மிசை இல்லை” என்கிறான். ஓசை தரும் இன்பத்தை உவமையிலா இன்பம் என்கிறான். “ பொருத்தாதா பொருள்களைப் பொருத்தி வைத்து அதிலே இசையுண்டாக்குதல் சக்தி” என்கிறான். “ பொதுப் பள்ளிக் கூடத்திலே சங்கீதம் கற்றுக்கொடுக்க வேண்டும்.  இது மற்ற நாகரீக தேசங்களில் சாதாரணமாக நடந்து வருகிறது. உயிரிலே பாதி சங்கீதம்” என்று எழுதுகிறான். 

தொல்காப்பியம் ஐவகை திணைகளை வகுத்துத் தந்திருப்பது அறிந்ததே. அதில் ஒவ்வொரு திணைக்கும் தனியாக பண்களும் சுட்டப்பட்டுள்ளன. பண்கள் மட்டுமல்லாமல்,  ஒவ்வொரு நிலத்திற்கும் அதற்குரிய  யாழ், பறை ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு துடி என்கிற பறை பாலைத் திணைக்குரிய பறையாகக்  காட்டப்படுள்ளது. சங்கப்பாக்களில் யாழ் வகைகள்,  முழவுக்கருவிகள், குழல் வகைகள்  சுட்டப்பட்டுள்ளன. “மலைபடுகடாம்”  என்கிற ஆற்றுப்படை நூல் ,  பாணன் இசைக்கும்   பல்வேறு வகையான இசைக்கருவிகளின் உருவ அமைப்புகள்,   அவை எழுப்பும் வெவ்வேறு  சத்தங்கள்  போன்றவற்றை  கூறுவதோடு,  யாழ் செய்யும் முறையையும் விளக்குகிறது. சங்கப்பாக்களில்  பாணன் ஒரு முக்கிய பாத்திரமாக  வருகிறான். விறலியர் வருகின்றனர். காவடி தூக்கிய விறலியின் சித்திரம் ஒன்று ஒளவையின் பாடலில் உள்ளது. சிலப்பதிகாரத்தில் இசை சார்ந்த குறிப்புகளை நிறையக் காணமுடிகிறது. 

நமது பழந்தமிழ்க் கவிதைகள் அனைத்தும் பாக்கள்தான். பாட ஏதுவான செய்யுள் வடிவில் யாக்கப்பட்டவை அவை. செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை  போன்ற  ஓசை ஒழுங்குகள் கொண்டவை. எதுகை, மோனை, அளபெடை, அந்தாதி போன்ற இசை நயங்களோடு  இயற்றப்பட்டவை

ஒரு கலித்தொகைப் பாடல்.. 

ஒருத்தி வீட்டை விட்டு காதலனோடு போய்விடுகிறாள். அவளுடைய தாய் அவளை பாலை நிலம் முழுக்க கண்ணீரோடு தேடியலைகிறாள். வழியில்  காண்பவர்களிடமெல்லாம் தன் மகளை கண்டீரா? கண்ணீடீரா? என்று கேட்டுக் கேட்டுக் மாய்கிறாள். வழிப்போக்கன்  ஒருவன் சொல்வது போல ஒரு பாடல். கண்டோர் கூற்றாக… 

“பலஉறு  நறுஞ்சாந்தம்  படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதான் என் செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே

ஏழ்புணர் இன்னிசை  முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும்,  யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே"

மலையுளே பிறந்தாலும் சந்தனத்தால் மலைக்கு ஒரு பயனும் இல்லை. அது இன்னொரு மானிடர் மேனியைத் தான் இன்புறுத்துகிறது. முத்தோ கடலில் பிறக்கிறது. கடலுக்கு அதனால் என்ன பயன்? அது தன்னை அணியும் மாந்தரையே மகிழ்விக்கிறது. யாழிசையோ  அதை  மீட்டுபவனையே ஆனந்தமாக்குகிறது. யாழுளே பிறப்பினும் யாழுக்கு அதனால் என்னதான்  பயன்? அப்படித்தான் உன் மகளும் உனக்கு. 

அந்த வழிப்போக்கன் ஆற்றுப்படுத்துகிறானா? அல்லது அந்த அன்னையின் உலகை நடு வீதியில் போட்டுடைக்கிறானா?  கொடூரமானதுதான் என்றாலும் போட்டுடைத்தலும்  ஆற்றுப்படுத்தல்தான். ஒருவருடைய எல்லா பராக்கிரமங்களும் முடிவுக்கு வந்து,   இனி செய்வதற்கு  ஒன்றுமேயில்லை என்கிற நிலையில்,  அவர்  பேச்சில் வெளிப்படுமே ஒரு  இசை,  அது  இந்தப் பாட்டில் உள்ளது. அந்த இசை,  கவிதைக்கு பெருமளவு உதவி செய்திருப்பதை எளிதாகவே உணர்ந்து கொள்ள முடிகிறது.  

இன்னொரு பாடல்..  சங்க இலக்கியப் பரப்பில் பிரபலமானது. ஆயினும் சுவை குன்றாதது. பார்வைக்கு எளியது போல் தோன்றினும். வாசிக்கும் ஒவ்வொரு முறையும் உள்ளத்தை அதிரவிடுவது.  தங்கள் தலைவன் இறந்து விட்டான். மக்கள் சோகம் தாளாது புலம்புவது போல் ஒரு பாடல்.  தலைவன் இறந்துவிட்டது தெரியாமல் அந்த நாட்டில்  வழக்கம் போல முல்லைப் பூ பூத்து விடுகிறது. அதை நோக்கிப் பாடுவது போல் ஒரு பாடல்..

“இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான்; பாடினி அணியாள்
ஆண்மை தோன்ற ஆடவர் கடந்த
வல்வேல் சாத்தான் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே”

இப்பாடலின் சாதாரணத்தை அசாதாரணமாக்குவது “ பூத்தியோ” என்கிற சொல். சொல் கூட அல்ல “ யோ” என்கிற சிறு அசை.  இந்தப் பாடலை முதன்முறையாக கேட்கையிலேயே உங்களுக்குப்  பலமுறை எங்கோ கேட்ட  நினைவு வருகிறதெனில், அது நமது ஆழ்மனதில் அலையடித்துக் கொண்டிருக்கும் ஒப்பாரிப்பாடல்களின் ஓசைகளால்தான்.  

இரண்டடியால் உலகத்தையே அளந்துவிட்ட  ஆழம் மிக்கவை என்று மெச்சப்படும் நூல் திருக்குறள். அப்படி அளந்ததின் இன்பத்திற்கு  அதன் இசைத்தன்மையும் ஒரு காரணம் என்பதை மறுக்க இயலாது.  சொல்லிப் பார்க்கும் சுகத்திற்காகவே சொல்லப்படும் குறள்கள் பல உண்டு. 

கடாஅக் களிற்றின் மேற் கட்படாம் மாதர்
படாஅ  முலைமேல்  துகில் 

(தகை அணங்கு உறுத்தல்)

பெறாமை அஞ்சும் பெறின் பிரிவஞ்சும்
அறாஅ   இடும்பைத்தென் நெஞ்சு.

(நெஞ்சொடு புலத்தல்)

தலைவனைக் கூடாத போது வருந்தி அழியும் என் நெஞ்சம்.  பெற்ற பிறகோ அவன் பிரிவஞ்சி வருந்தும். ஆக என் நெஞ்சத்திற்குக் கிடைப்பதெல்லாம் எப்போதும் வருத்தம், வருத்தமென்று வருத்தம் மட்டுமேதான்

இந்தக் கவிதையில் வருகிற “ அறா அ” என்கிற  அளபெடை வெறுமனே செய்யுள் இலக்கணத்தை மட்டும் நிறைவு செய்யாமல் கவிதையின் அகத்தோடு கலந்து ஒளிவீசக் காணலாம். அந்த அளபெடை தீரவே தீராத வருத்தத்தை துல்லியமாகப் பாடிவிடுகிறது. முதலில் சுட்டப்பட்டுள்ள குறளிலும் அளபெடை வெறும் இலக்கணம் என்று தோன்றவில்லை. 

ஓஓ இனிதே எமக்கிந் நோய் செய்த கண்
தாஅம்  இதற்பட்  டது.

(கண் விதுப்பு அழிதல்)

கண் தானே  என்னைக் காதல் வயப்படுத்தி துன்பத்தில் தள்ளியது. இன்று அதுவே  அவனைக் காணாது அழுது தவிக்கிறது.  அழட்டும்! அழட்டும்! நன்றாக அழட்டும். பழிக்குப் பழி!

இதில் எதிரியை நோக்கிய  ஒரு எக்காளச் சிரிப்பு கேட்கிறது.. ஓ..ஓ… என்று 

நாலடியாரின் ஒரு பாட்டில் வலுவான பறைச்சத்தம் கேட்கிறது. வாழ்வு முடிகையில் எழுகிற சத்தம். மனித அகந்தையின் தலையில் விழுந்து,  அவனது குலைநடுக்கும் சத்தம்.

கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென்று அலறப்
பிணங்கொண்டு காட்டு உய்ப்பார்க் கண்டும்-  மணங் கொண்டீண்டு
உண்டுண்டுண்  டென்னும் உணர்வினாற் சாற்றுமே
டொண்டொண்டொண் டென்னும் பறை

நமது பக்தி இலக்கியங்கள்  காதலாகி கசிந்து கண்ணீர் மல்குபவை. “திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் “  என்பது பிரபலமான ஒரு சொலவடை. அந்த உருக்கத்திற்கு காரணம் பக்தி. அந்த பக்திக்குள் இருப்பது சரணாகதியின் சங்கீதம்.


"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ  நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று  வீடுற்றேன்"

"அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே"

திருவாசகத்தில் நமது நாட்டுப்புற பாடல்களின் சத்தங்கள் தெளிவாகக் கேட்கின்றன. அம்மானை பாடல், சுண்ணப்பாடல், கும்மிப் பாடல், சாழல் பாடல், ஊசல் பாடல் என்று பெண்கள் தங்கள் தொழிலின் போதும், விளையாட்டின் போதும் பாடும் பாடல்களின்  பெயராலேயே அமைக்கப்பெற்ற பல பதிகங்களை இதில் காணமுடிகிறது.  ஆழ்வார்களின் கவிதைகளிலும் தாலாட்டுப் பாடல், பாவைப் பாடல் போன்றவை உள்ளன.

கம்பன்  இயலும் இசையும் எப்படிப் பொருந்தியிருக்க வேண்டும்  என்று சொல்கிறான் ஒரு பாடலில். 

“பருந்தொடு நிழல் சென்றன்ன  இயல் இசைப் பயன் துய்ப்பாரும்…”.  பருந்தும் அதன் நிழலும் போலிருக்க வேண்டும் இரண்டும் என்கிறான்.

கம்பன் இங்கு பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறார். பட்டிமன்றங்களில் தொடர்ந்து பாடப்படுகிறார்.  அவரைப் பேசுவதை விட பாடினால்தான் பட்டிமன்றம் சிறக்கிறது என்பதால் பலரும் அவரைப் பாட முயல்கிறார்கள். அவரும் பாட ஏதுவாகவே இருக்கிறார்.  கம்பனின் கீழ்காணும் பாடலை சொல்லவே முடியாது பாடத்தான் முடியும் என்று நினைக்கிறேன்

“இவ்வண்ணம்  நிகழ்ந்த வண்ணம்
 இனி,   இந்த உலகுக்குக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்றோர்
துயர் வண்ணம் உறுவதுண்டோ?
மைவண்ணதரக்கி  போரில், 
மழை வண்ணத்தண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்”

கம்பனில் இது போல் பல பாடல்களைக் காணமுடியும். 

சித்தர் பாடல்கள் நீண்ட காலம் வாய் மொழி மரபாக பாடப்பட்டு பின் தொகுக்கப்பட்டவை. ஆகவே அதில் இயல்பாகவே நாட்டுப்புற இசையின் அழகுகள் உள்ளன. தாண்டவக் கோனும், ஆனந்தக் கோனாரும், நந்தவணத்தாண்டியும் அர்த்தமாகும் முன்பே  நம்மை ஆட வைத்து விடுபவர்கள்.

தாந்  திமித்திமி  தந்தக் கோனாரே
தீந்  திமித்திமி  திந்தக் கோனாரே
ஆனந்தக் கோனாரே – அருள்
ஆனந்தக்  கோனாரே

(இடைக்காட்டுச் சித்தர்)

நந்தவனத்திலோர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

(கடுவெளிச்சித்தர்)

குற்றாலக் குறவஞ்சியில் வசந்த வல்லி பந்தடிக்கும் காட்சி புகழ் பெற்றது. இந்தப் பாட்டும் அவள் அடிக்கும் பந்தைப் போன்றே துள்ளக் காணலாம்.

செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம்  என்றாட - இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு
கொங்கை  கொடும்பகை  வென்றன மென்று குழைந்து குழைந்தாட -  மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே!

பாரதி தன் கவிதைகளுக்கு ராகம் , தாளமெல்லாம் சேர்த்து எழுதியவர். அவர் கவிதைகள் சங்கீதமேதான். பாரதியின் கவிதைகளில் செவ்வியல் இசை வடிவங்கள் மட்டுமன்றி  பள்ளுப்பாட்டு, கிளிப்பாட்டு, குறியாடிப்பாட்டு, கும்மிப்பாட்டு, சிந்துப்பாட்டு போன்ற நாட்டுப்புறத்தின் இசையழகுகள் பலவும்  இழையோடக் காணலாம்.



தமிழ்க் கவிதை வரலாற்றின் ஒரு கட்டம் வெறுமனே ஓசைகளால் நிரம்பத் துவங்கியது. ஆழமான தரிசனங்களோ,  கவித்துவமோ  இல்லாமல் சொற் சிலம்பம் ஆடத் துவங்கியது.  உள்ளீடற்ற வெற்றுச்  செய்யுள்கள் கவிதைகள் என்று உரிமை கோரத் துவங்கின. அலுப்பூட்டும் சந்தங்கள் பெருகி வளர்ந்தன.இதனால்  எளிய இனிப்புப்  பண்டமாக கவிதை மாறி விடும் ஆபத்து வந்தது. பாரதிக்கு முன்னான தனிப்பாடல்களிலும், அவருக்குப்  பின்னான பலரது கவிதைகளிலும் இந்த ஆபத்தைக் காணமுடிகிறது.   ஆகவே நமது நவீன தமிழ்க்கவிதை  இசையை வெறுக்கத் துவங்கியது.  ஆயினும் கவிதைக்குள் இசையை அப்படி அறவே ஒதுக்கிவிட இயலாது.  தமிழ் நவீன கவிதையின் குறிப்பிடத்தக்க தொடக்கம் என்று சொல்லப்படும் “ பெட்டிக்கடை நாராணன்” கவிதையிலேயே பாட்டின் சாயல்கள் தென்படுகின்றன. சி.மணி, ஞானக்கூத்தன் போன்றோர் தன் கவிதைகளில் இசைத் தன்மையை விடாது பேணியே வந்தனர். இதில் சி.மணி செய்யுள் தன்மையை கேலி செய்து, செய்யுள் போலவே சில கவிதைகளை எழுதியுள்ளார். ஞானக்கூத்தன் கவிதையொன்று அதன் “ பாட்டிற்காகவும்” பிரசித்து பெற்றது.

பவழமல்லி

கதை கேட்கப் போய் விடுவாள் அம்மா. மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்

பூக்களெல்லாம் மலர்ந் தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழ மல்லி

கதை முடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியில் முழு நிலவில் அந்த நேரத்
தனிமையிலே  என் நினைப்புத் தோன்றுமோடி?

மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் உரைநடை போல இருக்கின்றன என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. உண்மையில் அவை மொழி அலங்காரங்களை துறந்தவையே ஒழிய உரைநடையல்ல. அவரின் கவிதைகள் சில வாழ்வாங்கு வாழ்வதற்கான காரணம் அதனுள்  முனகிக்கொண்டே இருக்கும் ஒரு வித இசைத்தன்மைதான். 

மறுப்பு

எத்தனை முறை
வந்து கேட்டாலும்
“இல்லை இல்லை”
என்பதே உன் பதில்
எப்போதும் இல்லாததைக் கேட்பவர்களுக்கு
தருவதற்கு எதுவுமிருப்பதில்லை

ஆயினும்
ஒவ்வொரு முறையும் 
“ இல்லை இல்லை”
எனக் கேட்க நேர்பவனின்
கண்களில் தோன்றி மறைகிறதே
ஒரு சாம்பல் திரை

நீ 
அதைக் கொஞ்சம்
பாராதிரு

இளங்கோ கிருஷ்ணனின் கவிதை ஒன்று உண்டு. பாடினால் அழுகை பீறிடும் கவிதை. அழகை பீறிட வேண்டும் என்பதற்காகவே பாட்டின் வடிவில் எழுதப்பட்ட கவிதை. நான் இப்போது பாட்டின் பரவசத்தில் இருப்பதால் இளங்கோவின் பாடலையும், பாரதியின்  ஒரு பாடலையும் “இடைப்பிறவறல்” போல சேர்ந்து பாடிக் களிக்கலாம் என்று தோன்றுகிறது. இளங்கோ  இந்தக் கவிதையில் மதுவை மட்டுமே முன்வைக்கிறான். அதைத் தவிர்த்து  மகிழ்ந்து விடும் படியாக அவனுக்கு  இந்த வாழ்வில் வேறொன்றுமில்லை.  பாரதிக்கோ  எங்கெங்கு காணினும் மது. உள்ளும் புறமும் மது.  இளங்கோவின் கண்ணீரை ஆற்றுகின்ற ஒரு ஞானத்தகப்பன் போல இங்கு  பாடுகிறான் பாரதி.

ஒரே ஒரு மதுப் போத்தல்
அதற்கே நான் வந்தேன்
நகரெங்கும் படுகளம்
ஊரே பிணக்காடு
ஆனாலும் வந்தேன்
அதற்கே நான் வந்தேன்

மது நமக்கு,  மது நமக்கு , மதுநமக்கு விண்ணெலாம்,
மதுரமிக்க ஹரிநமக்கு, மது எனக் கதித்ததலால்;

நிலமெங்கும் கொடு நாகம்
நீளும் வழி பாதாளம்
ஆனாலும் வந்தேன்
அதற்கே நான் வந்தேன்

மது நமக்கு மதியும் நாளும், அது நமக்கு வானமீன்
மது நமக்கு மண்ணும் நீரும், அது நமக்கு மலையெலாம்

குன்றெங்கும் எரிமலை
குறும்புதரில் கொள்ளிவாய்
ஆனாலும் வந்தேன் 
அதற்கே நான் வந்தேன்

கடலெங்கும் பேய் அலைகள்
கரையெல்லாம் முதலை
ஆனாலும் வந்தேன்
அதற்கே நான் வந்தேன்

மது நமக்கோர்  தோல்வி வெற்றி,  மது நமக்கு வினையெலாம்
மது நமக்கு மாதர் இன்பம், மது நமக்கு மது வகை

வனமெல்லாம் புலிக்கூட்டம்
மரந்தோறும் வேதாளம்
ஆனாலும் வந்தேன்
அதற்கே நான் வந்தேன்

வானெங்கும் விஷக்காற்று
திசையெல்லாம் மின்னல்
ஆனாலும் வந்தேன்
ஒரே ஒரு மதுப்போத்தல்
அதற்கே நான் வந்தேன்

மது நமக்கு மதி நமக்கு , மது மனத்தோடாவியும்
மதுரம்மிக்க சிவம் நமக்கு  மது எனக் கதித்தலால்.

கவிதை அடிப்படையிலேயே தன்னுள் இசையைக்   கொண்டுள்ளது. அன்றும் இன்றும் சில  நவீனக் கவிதைகளில்  வலுவான இசைத்துடிப்பு உண்டு. சில ஒடுங்கி ஒலிக்கின்றன. ஓசை நயங்கள் மெல்லிய மீட்டல்களாக  நாமறியாவண்ணம் நம்மை இப்போது வரை பின் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.  பிள்ளை வெறுத்தாலும் வெறுக்காத அன்னை போல.

நவீனக் கவிதை தன்னுள் இசையை அனுமதிக்க மறுத்த போதும் அது ஒரு போதும் இசை சார்ந்த பரவசங்களைக் கைவிட்டதாகத் தெரியவில்லை.  நவீனக் கவிஞர்களின் கவிதைகளில் இசை சார்ந்த படிமங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன். நமது கவிதைகளுக்குள் செவ்வியல் இசைக் கலைஞரான  சஞ்சய் சுப்பிரமணியன் வந்துவிட்டார்.  நஸ்ரத் அலிகான் வருகிறார். இளையராஜா இருந்து கொண்டே  இருக்கிறார். கீழானது என்று ஒதுக்கப்பட்ட குத்துப்பாட்டை அனுபூதி நிலையில் வைத்துப் பேசிய கவிதை ஒன்று இருக்கிறது. “டங்காமாரி ஊதாரி “ என்று கூவிய படியே கானாப் பாடகனும் வந்து சேர்ந்து விட்டான்.

இசை தரும் படிமங்கள்

புல்லாங்குழல்
சகல மனிதர்களின்
சோகங்களையும்
துளைகளில்  மோதிற்று

கூரை முகட்டிலிருந்து இறங்கிய நாளங்கள்
ரத்தமாய்ப் பெய்தன
அறையெங்கும் இரும்பின் வாசனை

மறுநிமிஷம்
என் உப்புக் கரைந்து எழுந்தது
மல்லிகை மணம்

(ஹரிபிராசத் செளரஸ்யாவுக்கு)

வெளுத்து வாங்கும் வெங்கோடையில் ஒதுங்க ஓர் இடமாய் சுகுமாரன் எழுதியது...



“ வயலினிலிருந்து பெருகிய நதியில் மிதந்த
தோணியில் ஓர் இடம்..”

தமிழ்நாட்டில் தமிழர்கள் முன் பாடப்படும் பாடல்களில் தமிழே பிரதானமாக  இருக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் எழுந்த தமிழிசை இயக்கம் நமது பக்திக் கவிதைகளை பண் அமைத்து  பாடல்களாக பரவச் செய்தது.  ஆழ்வார்களும் நாயன்மார்களும்  கீர்த்தனை வடிவில் கச்சேரிகளுக்குள் சென்றார்கள்.  அர்த்தம் விளங்காத அதே பத்துப்பாடல்களை திரும்பத் திரும்ப கேட்கும்  தொல்லையிலிருந்து தமிழர்களுக்கு விடுதலை வேண்டும். தமிழில் புதிய கீர்த்தனைகள் நிறைய இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பாரதியின் கவிதைகளே பின்நாட்களில்  கீர்த்தனைகளாகி புகழ் பெற்றன.  பாரதிதாசன் கவிதைகளும் திரையிசை, மெல்லிசை வடிவங்கள் பெற்றன.  “ துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?” என்கிற பாடல் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் இப்போது பிரசித்தம். “ நடமாடும் தமிழிசை “என்று போற்றப்பட்ட M.M. தண்டபாணி தேசிகர் இந்த பாடலுக்கு இசையமைக்க  தான்   இரண்டு ஆண்டுகள் சிந்தித்தாகச் சொல்கிறார்.  “ பொய்யிலே முக்காற்படி புரட்டிலே காற்படி வையகம் ஏமாறும்படி வைத்துள்ள நூல்களை ஒப்புவதெப்படி?”  என்கிற பாரதிதாசனின் வரி   இறையனாரின் திருவிளையாடல்களுக்கும், உலகளந்த பெருமானின் லீலா விநோதங்களுக்கும் இடையில் புகுந்து இப்பொழுது நைஸாக மேடையேறிவிட்டது. 

வள்ளலாரின் நிறைய கவிதைகள்   இசைப்பாடல்களாக இணையத்தில் கிடைக்கின்றன. “ நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ? “ என்று மழையூர் சதாசிவம் பாடும் போது  நாம் கொஞ்சம் கூடுதலாகவே நடுங்கிப் போகிறோம். வள்ளலார் இந்திய இசை வடிவங்களைத் தாண்டி இப்போது மேற்கத்திய இசை வடிவங்களிலும் ஒலிக்கத் துவங்கி இருக்கிறார். அவர் கவிதைகளுக்கு ‘ இது நல்ல தருணம்’

இளையரஜாவின் இசையை யானைக் கூட்டம் ஒன்று  நின்று கேட்டது என்று சொல்வார்கள்.  நான் அதை சந்தேகத்திற்கிடமின்றி நம்புகிறேன். யானையை விட மனிதன் ரஸத்திலே தேர்ச்சி மிக்கவன்தான். அதிலும் எழுத்தாளன் , தானே ரஸத்தைப் படைப்பவன் அல்லவா? ஆகவே அவனை இசை ஆள்வது இயல்பானது. சில எழுத்தாளர்கள் இசையில் நல்ல பரிச்சையம் மிக்கவர்கள். சிலர் முறைப்படி இசை கற்றவர்கள். சிலர் பொதுவெளியில் பாட விரும்புகிறவர்கள். சிலர் திரைத்துறையில் பாடலாசிரியராகவும் உள்ளனர். ‘சர்க்கரை’ என்பதை ‘ ஸக்கரே..!’ என்று எழுத வேண்டும் என்கிற சூட்சமம் கூட அவர்களுக்குத் தெரிந்து விட்டது. 

கவிஞர் ரவி சுப்பிரமணியன்  சுமார் நூறு தமிழ்கவிகளின் கவிதைகளை அவரது நண்பர்களின் உதவியுடன்  மெட்டமைத்து பாட்டாக்கியுள்ளது ஒரு குறிப்பிடத்தகுந்த முயற்சி. பெருமாள் முருகன் சமீப நாட்களாக கீர்த்தனைகள் செய்கிறார். அதை டி.எம் கிருஷ்ணா தன் கச்சேரிகளில் தொடர்ந்து பாடி வருகிறார். அவருடைய “ நீ மட்டுமே..” என்கிற கீர்த்தனை தமிழ் நாட்டைக் காட்டிலும் கேரளாவில் பிரசித்தி பெற்றிருப்பதை சமீபத்திய கேரளா பயணத்தில் கண்டு கொண்டேன்.

தமிழின் குறிப்பிடத் தகுந்த சிற்றிதழ்களில் ஒன்றான “ மீட்சி” இதழின் 10 இதழ் இசை சிறப்பிதழாகவே வெளிவந்துள்ளது. சமீபத்திய உரையாடலொன்றில் பிரபல பாடகர் ஒருவர் இந்த இதழைக் குறிப்பிட்டுப் பேசினார். இங்கு இளையராஜாவின் இசை குறித்து நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ் மட்டுமல்லாமல் வேற்று மொழி இசைக்கலைஞர்களையும் அறிமுகம் செய்து ஷாஜி தொடர்ந்து எழுதி வருகிறார். நா.மம்மதுவின் இசை சார்ந்த எழுத்துக்கள் தமிழிசையின் பெருமையும் தொன்மையையும்  மீட்டெடுத்து அளித்து வருகின்றன. இயக்குநர், ஒளிப்பதிவாளர், புனைவெழுத்தளர் என்று பன்முகம் காட்டும் செழியன் எழுதியுள்ள “ the music school” என்கிற நூல் மேற்கத்திய இசையைக்  கற்றுக் கொள்வதற்கான சிறந்த நூல் என்று சொல்லப்படுகிறது.  ஒரு இளம் இசையமைப்பாளர் இந்த நூலை கோடிட்டுக் கோடிட்டு வாசித்து மகிழ்ந்ததை  நான் அருகிருந்து பார்த்திருக்கிறேன்

கவிதையில் மட்டுமல்ல உரைநடையிலுமே கூட இசையைத் தவிர்க்க இயலாது என்றே எண்ணுகிறேன். உரைநடையின் கவித்துவத்தை கூர்ந்து நோக்கினால் அந்த கவித்துவத்துள் இசை புன்னகைத்திருப்பதைக் காண முடியும்.  ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு ஓசை உண்டல்லவா? எனவே எழுத்து பாடியே தீரும்.

நான் எப்போது என் மனம் துயரத்தில் வீழ்ந்தாலும் பாரதியைப் புரட்டுவேன். உற்சாகத்தில் துள்ளும் போதும் பாரதியைப் புரட்டுவேன். காதல் போய் விட்டால் பாரதியைப் புரட்டுவேன். கவிதை வரவில்லையெனில் பாரதியைப் புரட்டுவேன். பாரதியைப் புரட்டுவதென்பது  பாட்டையும் கவிதையையும் ஒரு சேரப் புரட்டுவது. 

“என்னை ஒரு பாட்டாகவே மாற்றி விடு” என்கிறது பெரியசாமித் தூரனின் ஒரு வரி. மனிதன்,  தான்  பாட்டாக மாறும் வாய்ப்பை ஒரு போதும் தவற விட்டுவிடக் கூடாது.


(நன்றி: காலச்சுவடு - மார்ச் 25)



Comments

Thendral said…
பிறப்பு முதல் இறப்பு வரை!!!

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நக...

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் ...