“தூங்காதே தம்பி…தூங்காதே..” என்பது காலாவதியாகிவிட்ட ஒரு அறிவுரை இன்றோ “தூங்குங்கள்…! தூங்குங்கள்..! என்று கை கூப்பி வேண்டுகிறது மருத்துவம் அவர்கள் இருவருமே தேக ஆரோக்கியத்தில் கவனம் கொண்டவர்கள் ஆகவே சரியாக பத்துமணிக்கு “good night” சொல்லிக் கொள்வார்கள். அரைமணி நேரம் கழித்து அடுத்த “ good night “ “ good night ..!” “ good night…!” “Good night” க்கு தானொரு “good night” தானா என்பதில் கொடூரமான குழப்பங்கள் தோன்றிவிட்டன அது புரட்டிய அத்தனை அகராதிகளும் ஆலோசித்த அவ்வளவு அறிஞர்களும் “good night “ என்றால் " good night" தான் என்று சொல்லி அதை நட்டாற்றில் விட்டுவிட்டார்கள் இரும்புக் கதவில் தலையை முட்டிக் கொண்டு அது இரத்தம் பெருக்கிய பொழுதில் அவர்கள் 13 வது “ good night” சொல்லிக் கொண்டார்கள். சிற்றஞ்சிறுகாலை என்கிற “ good morning “ - ல் “ ok.. good night ..“ என்றவர்கள் அலுத்துக் கொண்ட போது ஆங்கிலத்திற்கு வெறி மூண்டுவிட்டது இரண்டு பொடணியிலும் பொளோர் பொளோரென நான்கு போடு போட்டது… “எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டல்லவா? “ |
2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...

Comments