ஓடுகிற பையன் எமோஜி நா ன் ஒரு இக்கட்டான தருணத்தில் அவனை வாட்ஸ் அப்பில் சந்தித்தேன் சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டு ஓடும் பையனாக சொல்லி ஆக வேண்டியதை சொல்லிவிட்டு ஓடும் பையனாக அவன் ஒரு பொடியன் என்பதால் “விளையாட்டுக்குத்தான் சொன்னேன்..” என்று சொல்லிவிடுவது அவனுக்கு எளிது ஆகவே சொல்லியும் சொல்லாமல் இருப்பதில் அவன் சமத்தன் அவன் வெறுமனே ஒரு கேள்வி அவனுக்குப் பதில்களில் ஆர்வமில்லை ஆகவே எதையும் அவன் நின்று கேட்பதில்லை “இந்த வாழ்வில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்களில்லை ..” என்று யாரோ ஒரு சாமியார் சொன்னதை அரைகுறையாக கேட்டுவிட்டு வந்த அப்பாவிச் சிறுவனவன், “சாப்பிட்டீங்களா..?” என்று கேட்டுவிட்டு ஓடி விடுவான். நாசகாரக் கும்பல் எ னக்குத் தெரியும் இங்கு காணும் எல்லாத் துன்பங்களுக்கும் இந்தக் கவிஞர்கள்தான் காரணம் மண் மண்ணென்றிருந்தது இவர்கள் அதில் சொர்க்கத்தைக் கட்டி எழுப்பினார்கள் சொர்க்கம் என்ற ஒன்று எழுந்ததால் அதிலிருந்து நரகம் என்று ஒன்று தானே எழுந்து கொண்டது கண்ணெறிருந்த கண்ணில் இவர்கள் கயலைத் தூக்கிப் போட்டார்கள் இடையென்றிருந்த இடையில் வேலியில் படரும் கொடியைக் கொண்டு வந்து சுற்றி விட்டார்கள் பேசின...