தெருவில் குந்தியிருக்கும் அவருக்கும் தெருவில் படுத்துறங்கும் நாய்களுக்கும் எப்படியோ சிநேகம் உருவாகிவிட்டது. காவல்பணி முடித்து அதிகாலையில் வீடு திரும்புகையில் நான்கு ஜீவன்களை அழைத்துக் கொண்டு பேக்கரிக்கு ஊர்வலம் போவார். ஒரு கட்டு பிஸ்கட்டை உடைத்து மழையைத் தூவுவது போல் தூவிவிடுவார். அவருக்கும் நாய்களுக்கும் இடையே இருந்த பிஸ்கட் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து நாளடைவில் வேறொன்று பூத்துவிட்டது. இப்போதெல்லாம் மாதக் கடைசிகளில் அவர் தூவுவது போல் தூவுகிறார். அவை உண்பது போல் உண்கின்றன. |
ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி ஆராய்ந்து கொண்டிருக்குமே ஒரு பைத்தியம் அது கூட நான்தான். சந்தேகம் எழும் ஆண்களின் கணக்குகளைத் திறந்து ஒன்றுவிடாமல் துப்பறிவேன் என்னைத் தவிர எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள் ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

Comments