ஒருவன் வழக்கமான தன்னை உடைத்து குப்பைத் தொட்டிக்குள் எறிந்துவிட்டு பேரணியில் கலக்கிறான். இவன் இன்னொருவன் மகத்தானவன். தனி ஆட்கள் சேர்ந்து சேர்ந்து உருவாகிறது ஓர் அணி. அணிகள் கூடிக்கூடி அலையடிக்கிறது பேரணி. நெருப்பினால் இழுத்துக்கட்டப்பட்ட பேரணிகள் பிரம்மாண்ட பேரணிகளாகி சடசடக்கின்றன. தொண்டையிலிருந்து எழும் முழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி இதயத்தை அடைகின்றன. நெஞ்சமே குரலாகி கூவி இடிக்கையில் ஒவ்வொருவரும் தனித்தனி பிரம்மாண்டம். (தோழர் சுகுமாரனுக்கு) |
உ ன்னோடு கோயிலுக்குச் செல்வதில் இனிமை உண்டு மங்களம் உண்டு ஆயினும் அது விசித்திரமானது நிரம்பிய பாத்திரத்தில் மேலும் ஊற்றுவது போன்றது சொல்லி முடித்ததையே திரும்பச் சொல்வது போன்றது காதல் அடி விழுந்து தொழுமாறு வேறொரு காதல் இல்லை ஏற்கனவே தெய்வம் சென்று சேர இன்னொரு தெய்வம் இல்லை. காதலோடு கோயிலுக்குள் நுழைகையில் எல்லா தெய்வங்களும் மொம்மைகளாகி விடுகின்றன மொம்மைகளின் முன்னே இறைஞ்சி நிற்கும் அவசியமில்லை முறையீடு வைக்க ஒன்றுமேயில்லை. காதலாகிக் கசிந்த பின்னே கண்ணீரும் மல்குமோ சம்பந்தா?

Comments