அ.முத்துலிங்கம் தன் சமீபத்திய உரையாடலொன்றில் இதுபோலச் சொன்னார். “சங்க இலக்கியங்கள படிச்சாவே போதும்...எதுக்கு மத்த இலக்கியத்தெல்லாம் படிச்சுட்டு என்று சில சமயம் தோன்றும்..”. எனக்கும் சில சங்கப்பாடல்களை வாசிக்கையில் அப்படித் தோன்றியதுண்டு. அகப்பாடல்களின் முதற்பொருள் நிலமும் பொழுதும். அவை நிலத்தையும் பொழுதையும் விரித்துப் பேசியவை. தொல்காப்பியம் வகுத்துச் சொல்லும் ஐவகை நிலங்களை நாம் அறிவோம். பொழுதுகளில் பெரும்பொழுது, சிறுபொழுது என்று இரண்டுண்டு. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் போன்ற பருவங்கள் பெரும் பொழுதாகவும், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் போன்ற பொழுதுகள் சிறுபொழுதுகளாகவும் சொல்லப்பட்டுள்ளன. இவற்றுள் மாலையைப் பற்றியே நம் அகப்பாடல்கள் அதிகமும் பாடியுள்ளன. சங்கத்து மாலைக்காட்சிகளில் நான் கண்டு மயங்கிய சிலவற்றை பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம். சங்கப்பாடல்கள் எல்லா பொழுதையும் பாடியுள்ளன. ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு பொழுது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதால் எல்லா பொழுதுகளும் அதில் உண்டு. “தோள் தோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே” (கு...